முகநூலால் நால்வர் உயிரிழப்பு

பங்களாதேஷ் நாட்டில் அண்மைக் காலமாக மத ரீதியாக வன்முறைகளை தூண்டும் இணையப் பதிவுகளால் அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், பொது மக்கள் அமைதியைப் பேண வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா கோரிக்கை விடுத்துள்ளார்.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் அண்மையில் ஒரு பதிவிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் நால்வர் உயிரிழந்தனர்.

இணையப் பதிவுகளால் வெடிக்கும் வன்முறைகள் பங்களாதேஷ் பொலிஸ் துறைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

பங்களாதேஷின் மொத்த மக்கள் தொகை 168 மில்லியன்களாக உள்ள நிலையில், அவர்களில் 90 சதவீதமானவர்கள் முஸ்லிம்களாவர்.

மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருந்த இந்து இளைஞரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முஸ்லிம்கள் சுமார் இருபதாயிரம் பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது சிலர் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

அந்த சம்பவத்தில் ஐம்பது பேர் காயமடைந்ததுடன், தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொய்த் தகவலைப் பரப்பும் நோக்கில் இந்து இளைஞரின் முகநூல் கணக்கு ஊடுருவப்பட்டிருப்பதாகப் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

குழப்பம் விளைவித்தவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவரை பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்