நீராவியடி விவகாரம் – ஞானசாரர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை.

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் விதிக்கப்பட்ட தடையுத்தரவை மீறி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் பொலிஸாரின் உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி ஆலய வளாகத்திலேயே தேரரின் உடலை தகனம் செய்திருந்தனர்.

அத்தோடு அதனை தடுக்க முற்பட்ட தமிழ் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விடயத்திற்கு தமிழ் அரசியல்வாதிகள், பொதுமக்களென பலரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அத்தோடு வடக்கிலுள்ள சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்