கிளிநொச்சியில் வாகன விபத்து – ஒருவர் பலி.

கிளிநொச்சி, ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் வான் ஒன்றில் பயணித்த ஐவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ஆம் கட்டை பகுதியின் ஏ-9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தில் சிக்கிய வான் மூன்றுமுறை தடம்புரண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்