ஊவா மாகாணத்தில் 140 தமிழ் பாடசாலைகளுக்கு பெயர் மாற்றம்.

ஊவா மாகாணத்தில் பல்வேறு விதமான பெயர்களில் காணப்பட்ட, 140 தமிழ் மொழி பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.

தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

ஊவா மாகாணத்தில் 203 தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், முதற்கட்டமாக 140 பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, மலையக பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றி உயிர்நீத்த அரசியல் தலைவர்கள் மூவரின் பெயர்கள் மூன்று பாடசாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.

01. பதுளை கோணமுட்டாவ தமிழ் வித்தியாலயம், பதுளை சந்திரசேகரன் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

02. பதுளை கம்பஹா தமிழ் வித்தியாலயம், பதுளை வேலாயுதம் தமிழ் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

03. பண்டாரவளை பூணாகலை தமிழ் மகா வித்தியாலயம், ஸ்ரீ சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தமிழ் பாடசாலைகளின் பெயர்களை மாற்றும் நடவடிக்கைக்கு கடந்த காலங்களில் சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஊவா மாகாண சபை கடந்த 8 ஆம் திகதி கலைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினத்திலேயே தமிழ் பாடசாலைகளின் பெயர்களை மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கையெழுத்திட்டிருந்தார்.

மாகாண சபை கலைக்கப்படும் தருணத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் கையெழுத்திட்டமை சில தரப்பினரால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலைகளின் பெயர் மாற்றம் தொடர்பில் பதுளையைச் சேர்ந்த வர்த்தகரான வனராஜா கருத்து தெரிவித்தார்.

´´பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டமையானது, தவறான விடயம். பாடசாலைகளின் பழமையை இல்லாது செய்யும் ஒரு நடவடிக்கை” என அவர் தெரிவித்தார்.

ஏதோ ஒரு காரணத்தை முன்னிலைப்படுத்தியே பாடசாலைகளுக்கான பெயர்கள் வைக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வனராஜா கூறினார்.

குறிப்பாக பண்டாரவளை பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்ரீ சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி என பெயர் மாற்றம் செய்வதற்காகவே 140 பாடசாலைகளுக்கான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

தனது குடும்பத்தின் பெயரை மாற்றம் செய்யும் நோக்குடன் அதிகாரத்தில் இருந்த செந்தில் தொண்டமான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்க உறுப்பினர் புஸ்பராஜாவும் கருத்து வெளியிட்டார்.

பாடசாலையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் எவருக்கும் அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைக்கு பொதுவான பெயர் சூட்டப்பட்டிருக்குமானால், அதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என கூறிய அவர், தனிநபர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டமையானது தவறான விடயம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் தொடர்புக் கொண்டு வினவியது.

இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்காக பாரிய சேவையாற்றி, மக்கள் சேவையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே உயிர்நீத்த தலைவர்களின் பெயர்களையே, தான் சூட்டியதாக செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

குறித்த பாடசாலைகளின் அதிபர்களினால் முன்மொழியப்பட்டு, அவர்களின் முழுமையான அனுமதியுடனேயே இந்த பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சிங்களம், ஆங்கிலம் மற்றும் எண்களிலேயே பெயர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மாற்றும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அவ்வாறு ஏனைய மொழிகள் மற்றும் இலக்கங்களில் வைக்கப்பட்டிருந்த பாடசாலைகளின் பெயர்களை மாற்றி, மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் பணியாற்றிய தலைவர்கள் உள்ளிட்ட தமிழ் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பதுளை ஊவாக்கலை தமிழ் வித்தியாலயம், பதுளை சுவாமி விவேகானந்தர் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பதுளை கொக்காகளை தமிழ் வித்தியாலயம், பதுளை விவேகானந்தர் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மொனராகலை கமேவெல தமிழ் மகா வித்தியாலயம், மொணராகலை திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பதுளை டைரபா தமிழ் வித்தியாலயம், பதுளை பாரதி தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பதுளை ரோஹம்டன் தமிழ் வித்தியாலயம், பதுளை பெரியார் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பதுளை நாயபெத்த இலக்கம் 1 தமிழ் வித்தியாலயம், பதுளை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் வேற்று மொழிகள் மற்றும் இலக்கங்களில் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் பாடசாலைகளின் பெயர்கள், தமிழ் மொழியில் மாற்றப்பட்டமைக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

உலகத் தமிழ் சங்கம், சென்னை தமிழ் சங்கம், தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை, மலேசியா பாராளுமன்ற உறுப்பினர்கள் என சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் கிடைக்கின்றன.

ஊவா மாகாணத்தில் ஏனைய மொழிகள் மற்றும் இலக்கங்களில் காணப்பட்ட பெயர்களை தமிழ் மொழியில் மாற்றியதை போன்று, இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களிலும் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கூறுகின்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்