தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து, மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் ஜனாதிபதி, பிரதமர், புலனாய்வு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் வழங்கியதை அடுத்து அனைத்து சாட்சிப்பதிவுகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவுக்குழு அறிவித்தது.

இதுவரை மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு அறிக்கையை இறுதி செய்து இம்மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென தெரிவுக்குழு தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும் அறிக்கை தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்