பாடப் புத்தகத்தில் ரஜினி

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து செய்திகளும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய ‘Rags to riches story’ என்ற அந்தப் பாடத்தில் “பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார ஐகானாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார்” என்று குறிப்பிட்டு அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லையில் இன்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்த நாட்டில் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைப்பால் உயர்ந்திருக்கிறாரா? மற்றவர்கள் யாரும் உயரவில்லையா? சுந்தர் பிச்சை போன்றவர்களை பாடத்திட்டத்தில் இணைத்தால் அது முன்மாதிரியாக இருக்கும். தங்களது சுய உழைப்பில் முன்னேறிய எத்தனையோ கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களது வாழ்க்கை குறிப்பை பாடத்தில் சேர்த்திருக்கலாமே” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “திரைப்படத் துறையில் நடிப்பதையே சாதனை என்பதை என்ன சொல்ல முடியும். கலைத் துறையில் சாதனை செய்தவர்கள் என்றால் கமல்ஹாசன் குறித்து சேர்த்திருக்கலாமே. ஏனெனில் ரஜினியை விட கமல்ஹாசன்தானே பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் வேண்டுமென்றே செய்வதுதான்” என்றும் விமர்சித்தார்.


Recommended For You

About the Author: Editor