காணிகள் பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பது நிறுத்தப்படும்! அனுரகுமார!!

நாட்டு மக்களின் பொது சொத்தான காணிகளை அரசியல் நண்பர்களுக்கு வழங்குவதையும் பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையும் முழுமையாக நிறுத்த போவதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய ஐக்கிய கொள்கை அறிக்கையை நேற்று நீர்கொழும்பில் வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கு தடையாக இருக்கும் மொழி சம்பந்தமாக கவனம் செலுத்தி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சாதாரண தரம் வரை கற்பிப்பதை கட்டாயமாக்கவும் அதற்காக நிதிகளை ஒதுக்குவது தொடர்பான விடயங்களும் இந்த கொள்கை அறிக்கையில் இருக்கின்றன.

பிரிந்து வேறுபடும் மனநிலைமை இல்லாத இலங்கையர்கள் என்ற இன அடையாளத்தை கட்டியெழுப்பவும் சகல இனங்களின் சமய, பொருளாதார, மொழி மற்றும் அரசியல் ரீதியான பன்முக தன்மைக்கும் அவர்களின் உரிமைகளை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதும் எமது தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் நோக்கம்.

இதனடிப்படையில், சுதந்திரம், ஜனநாயகம், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, காணி, இருப்பிடம், குடியேற்றங்கள், மொழி, மலையக மக்கள், தேசிய ஐக்கியம், நல்லிணக்கம், கைத்தொழில்,கமத்தொழில் போன்ற விடயங்கள் சம்பந்தமான 70 கொள்கைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor