தடுமாறிய இந்தியா: கைகொடுத்த ரோஹித் சதம்!

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 39/3 என்று தடுமாறிய இந்திய அணியை, தனது அபாரமான சதத்தின் மூலம் மீட்டெடுத்து, 224 ரன்களுடன் நிலை நிறுத்தியிருக்கிறார் ரோஹித் சர்மா.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று காலை துவங்கியது.

முதல் இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி, இப்போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது. போட்டியின் துவக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

புனேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மயங்க் அகர்வால், ரபாடா பந்தில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர் ஒன் – டவுன் ஆக களமிறங்கிய புஜாரா, ரபாடா பந்தில் எல்.பி.டபிள்யூவில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் களத்தில் நிலைத்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 ரன்களுக்கு வேகப்பந்து வீச்சாளர் நார்த்தியே பந்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 39/3 என தடுமாறத் துவங்கியது.

இந்நிலையில், ரோஹித் சர்மாவும் ரஹானேவும் களத்தில் இணைந்தனர். சரிவில்லாமல் அணியை காப்பாற்ற பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது இவர்களது பார்ட்னர்ஷிப். அடித்து ஆடிய ரோஹித் சர்மா 130பந்துகளில் 13 பவுண்டரிகள் 4 சிச்கர்களுடன் 6வது டெஸ்ட் சதத்தையும் தொடரில் 3வது சதத்தையும் எடுத்தார்.

ஆட்ட முடிவில், ரோஹித் சர்மா தற்போது 111 ரன்களுடனும், அஜிங்கிய ரஹானே 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது 224/3 ரன்களுடன் இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor