மலேசிய இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!!

மலேசியா – கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முற்பட்டார்கள் என தெரிவித்து மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் ஸ்தானிகராலய வளாகம், உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கோலாலம்பூரில் உள்ள சான்சரி வளாகம் ஆகிய இடங்களில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 பேரை மலேசிய அதிகாரிகள் அண்மையில் கைது செய்ததை அடுத்து, இரு இராஜதந்திர வளாகங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு ரோயல் மலேசிய பொலிஸார் கோலாலம்பூர் பொலிஸாரை எச்சரித்திருந்தனர்.

இதேவேளை, கடந்த 10ம் 12ம் திகதிகளில் மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்ப முற்பட்டதாக தெரிவித்து 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவை அறிவித்த மலேசியாவின் டி.ஏ.பி கட்சியின் இருவர் உட்பட 12 பேர் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் மற்றும் இயக்கத்திற்கான நிதி சேகரிப்பு ஆகிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இதுவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor