புயலில் சிக்கியது இளவசர் வில்லியம் பயணித்த விமானம்!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தம்பதி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தபோது பலத்த புயல் காற்று வீசியதன் காரணமாக விமானம் தொடர்ந்து பயணிக்க முடியாமல் தடுமாறியுள்ளது.

இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எயார்பஸ் ஏ-330 ரக விமானத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வில்லியம் – கேட் தம்பதி லாகூரில் உள்ள புனித தலத்துக்கு சென்று, அங்குள்ள மதகுருக்களை சந்தித்து பேசினர். பின்னர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் அகடமிக்கு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, இருவரும் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு விமானத்தில் சென்றவேளை இஸ்லாமாபாத்தை நெருங்கியபோது, பலத்த புயல் காற்று வீசியது. மேலும் மின்னலும் ஏற்பட்டது. இதன் காரமணமாக விமானம் தொடர்ந்து பயணிக்க முடியாமல் தடுமாறிய நிலையில் விமானம் சுமார் ஒரு மணி நேரமாக வானில் வட்டமிட்டபடியே இருந்தது.

மோசமான வானிலைக்கு மத்தியில் விமானி 2 முறை விமானத்தை தரையிறக்க முயற்சி செய்த போதும் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து விமானம் மீண்டும் லாகூருக்கு திருப்பப்பட்டது.

லாகூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய இளவரசர் வில்லியம் தாங்கள் இருவரும் நலமாக இருப்பதாக கூறினார்.


Recommended For You

About the Author: Editor