வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகம் பூசகரிற்கு எதிராக அழைப்பாணை!!

வெடுக்குநாரி மலையில் ஏணிப்படி அமைத்த விவகாரத்துக்காக ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் பூசகரிற்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக ஆலய நிர்வாகத்தினரை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெடுங்கேணி- வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

எனினும் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வெடுக்குநாரி மலையில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கபட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்படது.

குறித்த ஏணிப்படி பொருத்தியமைக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் இம்மாத முற்பகுதியில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தினரை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த விடயம் தொடர்பாக வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் பூசகரிற்கு எதிராக தொல்பொருட்திணைக்களத்தால் வவுனியா நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor