யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பான முழுமையான விபரங்கள்!!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து முதலாவது விமானம் உத்தியோகபூர்வமாக பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதை அடுத்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளாந்த விமான நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான புது டில்லி, கொச்சின், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Air India விமான நிறுவனம் முதலாவது பரீட்சார்த்த விமன சேவையை மேற்கொள்ளவுள்ளது. வாரத்தில் 3 நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும் எனத்தெரிவித்துள்ள விமான நிறுவனம் ,தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் Air India விமான நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இலங்கை விமான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் விமான நிலையத்தின் ஓடுபாதை, 2.3 கிலோமீற்றர் வரை புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் ஓடுபாதை விரிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும், விமானக் கட்டுப்பாட்டு அறை மற்றும் பயணிகள் முனையமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 2250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த விமான சேவை அபிவிருத்திப்பணிகள் 3 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. முதல் கட்டத்தின் கீழ் 950 மீற்றர் விமான ஓடு பாதை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 72 இற்கு குறைவான Bombardier – 100 ரக விமானங்களை பலாலி விமான நிலையத்தினால் கையாளக்கூடியதாக அமைந்திருக்கும்.

பலாலி விமான நிலையம்

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி 20 கிலோமீற்றர் தொலையில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதன்பின்னர் இலங்கை வான்படை இதனைக் கையகப்படுத்தியதோடு யுத்தகாலத்தில் வானூர்தி நிலையத்தூடாக கொழும்புக்கு சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி கடந்த ஜுலை மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் VCCJ மற்றும் சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் JAF ஆகும்.

நடுத்தர அளலான A-320, B-337 விமானங்களை கையாளக்கூடிய வகையில் கூடிய வகையில் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில் தொடர்ந்தும் அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் சர்வதேச விமான சேவை, 1967ம் ஆண்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்மாணத்துடன் ஆரம்பித்ததுடன் அதுவரை விமான பயண நடவடிக்கைகள் இரத்மலான விமான நிலையத்துடன் ஊடாகவே நடைபெற்றது.

இதேவேளை 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பலாலி விமான நிலையம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் பிரதேச அபிவிருத்தி ஏற்படுவதுடன் இதன் மூலம் இந்த பிரதேச மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு வணிக மற்றும் சுற்றுலா தொழில் துறையில் அபிவிருத்தி ஏற்படும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் அல்லாமல் இலங்கையின் வட மாகாண இளைஞர்களின் தொழிலின்மை மற்றும் பொருளாதார பின்னணி போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் உயர் முன்னுரிமை கொடுத்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமையப்பெற்றது பிராந்தியத்தில் பாரிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து தலைநகர் கொழும்பை வந்தடைவதற்கு 8 மணித்தியாலங்கள் தேவைப்படும் நிலையில் வெளிநாடுகளுக்கு தமது பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இதுவரை சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.

தற்பொழுது பலாலி விமான நிலையத்தினூடாக வடக்கில் உள்ள மக்கள் கொழும்பு ஊடாக வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் இல்லாமையினால் வடக்கில் உள்ள மக்கள் தமது சொந்த இடத்தில் இருந்தே தென் இந்தியாவிற்கான பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு மற்றும் குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் தமது பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது பிராந்திய விமான நிலையமாக மட்டுமன்றி சர்வதேச விமானங்களை கையாளக்கூடிய நிலையமாக அதாவது தென் இந்தியாவில் உள்ள நகரங்களை உள்ளடக்கியதான விமான சேவைகளை மேற்கொள்ளக்கூடிய நிலையமாக நவீன மயப்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் சுற்றுலா தொழிற்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பலாலி சர்வதேச விமான நிலைய நிர்மாணத்தின் நோக்கங்கள்:-

வடக்கு அபிவிருத்தி செயற்பாடுகளின் பிரதான செயற்பாடாக நிறைவேற்றுதல் மற்றும் வலயத்தின் விமான செயற்பாட்டில் அபிவிருத்தியில் சந்தைப் பங்கை கைப்பற்றிக்கொள்ளல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று சர்வதேச விமான நிலையமொன்றாக செயற்படுதல். மற்றும் இலங்கைக்கு பொருளாதார மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கு வசதிகளை வழங்கும் வழியொன்றாக செயற்படுதல் போன்றவை அமையும்.

சர்வதேச விமான நிலையத்தின் அண்மையில் தொழிற்சாலைகள் உருவாக்குவதன் மூலம் இலகுவாக சர்வதேச சந்தைக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய இயலுமை காணப்படும்.

இதற்கு அருகாமையில் பாரிய அளவிலான தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு போதியளவு காணி மற்றும் உழைப்பினை வழங்குவதற்கு முடியுமாக இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு இலகுவாக தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் உழைப்பினை பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுவதுடன் மீள் ஏற்றுமதிக்காக சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு விமான நிலையம் அமையப்பெற்றமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor