அவுஸ்ரேலியா நோக்கி பயணமாகும் இளம் வீரர்கள்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு, அனைத்து அணிகளும் அடுத்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராகிவிட்டன.

இதனால், ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில், ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு, ரி-20 போட்டிக்கான அட்டவணையை தயார் செய்து வருகின்றன.

இதற்கிடையில் உலகக்கிண்ண தொடரை நடத்தும் அவுஸ்ரேலியா அணி, இம்முறையாவது ரி-20 உலகக்கிண்ணத்தை வென்றுவிட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது.

இதற்காக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வரவழைத்து உலகக்கிண்ண தொடருக்கு முன்னோட்டமாக ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான ரி-20 கிரிக்கெட் வரலாற்று வெற்றியை தொடர்ந்து, அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி, அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இத்தொடருக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தொடருக்கான இலங்கை அணி, அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தொடருக்காக செல்லவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியில், சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

அதாவது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் பாகிஸ்தான் தொடரில் விளையாடி சோபிக்க தவறிய நான்கு வீரர்கள் நீக்கப்பட்டு, பாகிஸ்தான் அணியுடனான தொடரிலிருந்து விலகிய முன்னணி நான்கு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இடம்பெற்றிருந்த விக்கெட் காப்பாளர்களான சதீர சமரவிக்ரம, மினோத் பானுக, சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க மற்றும் துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ பெரேரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக லசித் மாலிங்கவுடன், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய நான்கு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக மேற்குறித்த வீரர்கள் குறித்த தொடருக்கு செல்ல மறுத்திருந்த நிலையில், குசல் மெண்டிஸ் மாத்திரம் உபாதை காரணமாக பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை.

எனினும், இப்போது உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அவர், உடற்தகுதியை நிரூபித்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.

ரி-20 அணியின் தலைவராக மீண்டும் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு தலைமை தாங்கிய தசுன் ஷானக அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிரான ரி-20 தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

16 பேர் கொண்ட அணி வீரர்களின் விபரம்,

லசித் மாலிங்க தலைமையிலான அணியில், தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, செஹான் ஜயசூரிய, குசல் பெரேரா, தசுன் ஷானக, ஓசத பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ஷ, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், கசுன் ராஜித, இசுரு உதான, நுவன் பிரதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இதன் முதல் ரி-20 போட்டி 27ஆம் திகதி அடிலெய்டிலும், இரண்டாவது ரி-20 போட்டி 30ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்திலும், மூன்றாவது ரி-20 போட்டி நவம்பர் 1ஆம் திகதி மெல்பேர்னிலும் நடைபெறவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்