அமெரிக்க அதிபரை புறக்கணித்த துருக்கி அதிபர்!!

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தாயிப் ஏர்டோகன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுதிய கடிதத்தை குப்பைக் கூடையில் வீசியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் துருப்புக்கள் சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஒக்ரோபர் 9 திகதியிடப்பட்டு ட்ரம்ப் அனுப்பிய கடிதத்தில், ஏர்டோகனிடம் “கடினமான மனிதராக வேண்டாம்”, “முட்டாள் தனமாக நடந்துகொள்ளவேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் எழுதிய இந்தக் கடிதம் ஏர்டோகனால் முற்றாக நிராகரிக்கப்பட்டதாக துருக்கிய ஜனாதிபதி வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியின் கடிதம் கிடைத்த நாளில், துருக்கி, குர்திஷ் தலைமையிலான படைகளுக்கு எதிராக எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியிருந்தது.

ஒரு நல்ல திட்டத்தை மேற்கொள்வோம், ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கு நீங்கள் துருக்கிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவில்லை, துருக்கியப் பொருளாதாரத்தை அழிக்க நான் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் மனிதாபிமானத்துடன் செயற்பட்டால் வரலாறு உங்களை சாதகமாகப் பார்க்கும். நல்ல விடயங்கள் நடக்காவிட்டால் வரலாறு உங்களை எப்போதும் பிசாசாகப் பார்க்கும் என்றும் கடிதத்தில் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும் டொனால்ட் ட்ரம்ப்பின் கடித்தை ஏர்டோகன் முழுமையாக நிராகரித்து குப்பைக் கூடையில் வீசியுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Recommended For You

About the Author: Editor