இறுதி யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ குற்ற‌ம் சாட்டுவ‌து உண்மைக்கு புற‌ம்பான‌தாகும்!!

இறுதி யுத்த‌த்தின் போது யாராவ‌து காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டிருந்தால் அது ப‌ற்றி ச‌ர‌த் பொன்சேக்காவிட‌மே கேட்க‌ வேண்டும் என‌ ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ தெரிவித்த‌மை உண்மையும் ய‌தார்த்த‌முமாகும் என‌ உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

கொழும்பு கிருல‌ப்ப‌னையில் ந‌டைபெற்ற‌ ஊட‌க‌ மாநாட்டின் போது அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ இராணுவ‌த் த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்புச் செய‌லாள‌ராக‌வே இருந்தார்.

யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா மிக‌ச்ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார்.

அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து. கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து.

ம‌ஹிந்த‌ த‌ன‌து அர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.

அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா. இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா.

யுத்த‌த்தில் ச‌ர‌ண‌டைந்த‌ எவ‌ரும் கொல்ல‌ப்ப‌ட‌வில்லை என ஏற்க‌ன‌வே பொன்சேக்கா சொல்லியுள்ளார். க‌ள‌த்தில் நின்ற‌ அவ‌ர‌து பேச்சு ஏற்றுக்கொள்ள‌க்கூடிய‌தாகும். இந்நிலையில் இது ப‌ற்றி கோட்டாவிட‌ம் கேள்வி கேட்ப‌து அர்த்த‌ம‌ற்ற‌தாகும். இது விட‌ய‌த்தை ஒருத‌லைப்ப‌ட்ச‌மாக‌ த‌மிழ் க‌ட்சிக‌ள் பார்ப்ப‌து த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

அத்துட‌ன் இறுதி யுத்த‌த்தில் ஒரு ல‌ட்ச‌ம் பேர் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌வும் நாற்ப‌தினாயிர‌ம் பேர் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌வும் குற்ற‌ம் சாட்டுவ‌து உண்மைக்கு புற‌ம்பான‌தாகும்.

யுத்த‌த்துக்கு முன் 2001ஆம் ஆண்டு தேர்த‌லில் வ‌ன்னி ம‌க்க‌ளின் மொத்த‌ வாக்க‌ளிப்பு 53038 பேர். யுத்த‌த்துக்கு பின்ன‌ர் 2015ஆம் ஆண்டு மொத்த‌ வாக்க‌ளிப்பு 150,366 ஆகும். இத‌ன்ப‌டி யுத்த‌த்துக்கு பின்பு ம‌க்க‌ள் தொகை மும்ம‌ட‌ங்காக‌ மாறியுள்ள‌தால் நாற்ப‌தாயிர‌ம் பேர் கொல்ல‌ப்ப‌ட்டிருந்தால் யுத்த‌த்துக்கு பின் வாக்காள‌ர் தொகை குறைந்திருக்க‌ வேண்டும்.

ஆக‌வே த‌மிழ் க‌ட்சிக‌ள் தொட‌ர்ந்தும் ம‌ஹிந்த‌, கோட்டா ப‌ற்றி பொய் சொல்வ‌தை த‌விர்க்க‌ வேண்டும் என்றார்.

இந்த‌ ஊட‌க‌ மாநாட்டின் போது ஸ்ரீல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ த‌விசாள‌ர் புரொப‌ச‌ர் ஜி எல் பீரிஸ், மாத்த‌ளை முன்னாள் மேய‌ர் ஹில்மி க‌ரீம் ஆகியோரும் உரையாற்றின‌ர்.


Recommended For You

About the Author: Editor