கழுத்தை அறுப்பதாக சைகை காட்டியவருக்கு சிக்கல்.

லண்டனில் உள்ள தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச நிலையம், “இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோதும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, அந்த அலுவலகத்திற்கு வௌியில் புலம்பெயர் தமிழ் மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டங்காரர்களை அச்சுறுத்தும் வகையில் உயர்ஸ்தானிகர் அலுவலக மேல் மாடியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக எச்சரிக்கை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் பின்னர் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையீட்டின் பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

குறிப்பாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் இந்த அச்சுறுத்தும் செயற்பாடு அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர பணிக்கு உட்பட்டது அல்ல என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் நாளை வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு சுருக்கமான விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்