வெள்ளைக் குதிரையில் வட கொரிய அதிபர்!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், வெள்ளைக் குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் கிம் ஜாங் உன் இதுபோன்ற வித்தியாசமான வைரலை ஏற்படுத்தியுள்ளார்.
உள்ளூர் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள புகைப்படங்களில், கிம், வட கொரியாவின் உயர்ந்த மலைப் பகுதியான மவுண்ட் பேக்டுவில் பனி வயல்கள் மற்றும் காடுகளின் நடுவே ஒரு பெரிய வெள்ளைக் குதிரையில் தனியாகச் சவாரி செய்வதைக் காணமுடிகிறது.
வடகொரியாவில் கொள்கை ரீதியான முக்கிய முடிவுகளின்போது கிம் பலமுறை இங்குச் சென்று வருவதாக அந்நாட்டின் உயரதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர். 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கிம் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய சில நாட்களுக்குப் பிறகு மவுண்ட் பைக்டுவுக்கு சென்று வந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கிம், தென் கொரிய அதிபர் மூன் ஜே-வை மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இதையடுத்து இரு தரப்பு உறவுகள் சிறப்பாக இருந்தது.
இதற்கிடையில் அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மென்மையாக்குவதற்கு இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே காத்திருப்பதாகவும், வட கொரியா குறிப்பிடப்படாத புதிய பாதையை முன்னெடுக்கும் என்றும் கிம் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அவர், வெள்ளைக் குதிரையில் மவுண்ட் பேக்டுவில் சுற்றி வரும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரியப் புரட்சியின் வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்நாட்டு அதிகாரிகள், உலகை வியக்க வைக்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
பல வல்லுநர்கள் கே.சி.என்.ஏ,வின் இந்த புகைப்படம் குறித்து கூறுகையில், வட கொரியா விரைவில் விண்வெளி ஏவுதலை நடத்தும் என்று சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor