
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்தால் மட்டுமே விவசாயத்துக்கும், மக்களின் பயன்பாட்டுக்கும் தண்ணீர் கிடைக்கும்.
கடந்த 4 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கமுதி, கடலாடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க இரவு பகலாக காத்திருக்க வேண்டியுள்ளது.
எல்.கருங்குளம் கிராமத்தில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், சீட்டு குலுக்கி போட்டு தண்ணீர் பிடிக்கின்றனர். அவர்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால், ஒரு குடம் நீரை 5 ரூபாய்க்கும், குடிப்பதற்கு ஒரு பானை நீரை 12 ரூபாய்க்கும் வாங்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தண்ணீருக்காக மட்டும் நாள்தோறும் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை செலவிட வேண்டியிருப்பதாக கிராமவாசிகள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.