உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவரின் மகளை கொன்றுவீட்டீர்கள்: நீதிமன்றம்!

சட்ட விரோத பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமணத்துக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கில் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் இருவரும் நீதிமன்ற அழுத்தத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 10ஆம் தேதி இருவரது சார்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை.

கட்சியினர் பேனர் வைத்ததற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை. வழக்கில் பெரும்பான்மையான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தங்களைச் சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இம்மனுவை அக்டோபர் 15ஆம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி மனு இன்று(அக்டோபர் 15) நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க, மற்றொருவரின் மகளைக் கொன்றுவிட்டீர்கள் என்று ஜெயகோபாலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

சுபஸ்ரீ மரணத்துக்குக் காரணமான பேனர் வைக்கப்பட்ட விவகாரத்தில் தவறிழைக்கவில்லை என்று சொல்லும் நீங்கள் தலைமறைவாக இருந்தது ஏன்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது ஜெயகோபால் தரப்பில், ”சுபஸ்ரீக்கு விபத்து நடந்த பிறகு, ஜெயகோபால் உடல் நலக் குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor