அரசு பள்ளிகளில் இனி ”ஸ்மார்ட் கார்டு”

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 70 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்த படி, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வக கட்டிடங்கள், கழிப்பறை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், காஞ்சீ புரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 21 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்கள் என மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களையும் முதல்- அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், 2019-2020-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளின் சுய விவரங்களை பதிவு செய்யும் வசதியுடன் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ (திறன் அட்டைகள்) தயாரிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில மாணவ- மாணவிகளுக்கு அந்த கார்டுகளை வழங்கி புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 35 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இன்னும் 2 வாரங்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விடும். மீதமுள்ள 35 லட்சம் பேருக்கு ஜூலை 15-ந் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்மார்ட் கார்டின் முகப்பு பக்கத்தில் மாணவ-மாணவிகளின் பெயர், தந்தை பெயர், வரிசை எண், பள்ளியின் பெயர், பிறந்த தேதி, தொடர்பு கொள்ள செல்போன் எண், வீட்டு முகவரி ஆகியவை பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

மேலும் ஸ்மார்ட் கார்டில் ‘கியூ.ஆர். கோடு’ம் இடம்பெற்று உள்ளது. அதில் மாணவ- மாணவிகளின் அனைத்து வகையான சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். இதனால் ஒரு மாணவர் ஒரு அரசு பள்ளியில் இருந்து மற்றொரு அரசு பள்ளியில் சேருகிறார் என்றால், அவர் எந்த சான்றிதழையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இந்த ஸ்மார்ட் கார்டை கொண்டு சென்று பள்ளியில் காண்பித்தால் போதும்.

ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவ-மாணவிகளின் முழு விவரங்களையும் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இயக்குனர், செயலாளர், அமைச்சர் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முழு தகவல்கள் பள்ளிக்கல்வி துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. மாணவ- மாணவிகளும் தங்களுடைய சான்றிதழ்களை கியூ.ஆர். கோடு மூலம் எடுக்கும் வசதியும் இதில் இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor