சிறிரங்காவை கைது செய்ய உத்தரவு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா  ஜெயரத்தினத்தை கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.

அந்த விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான சிறீரங்காவின் பாதுகாவலரே வாகனத்தைச் செலுத்திச் சென்றதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் சிறீரங்கா  ஜெயரத்தினமே வாகனத்தைச் செலுத்திச் சென்றார் என்றும் அவரது சாரத்தியத்தின் தவறே விபத்து ஏற்பட்டு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என்றும் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிறீரங்காவுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 298ஆம் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து அவரைக் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்