பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நபரே கைக்குண்டுடன் கைது.

ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது , அங்கிருந்து தப்பி சென்ற இளைஞனே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாழ் இராசாவின் தோட்டம் பகுதியில் மறைந்திருப்பதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்டையில் அங்கு விரைந்த பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்படும் போது அவரது உடமையில் கைக்குண்டு காணப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஹெரோயின் போதை பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் நிலைய சிறைக்கூட கதவின் பூட்டினை சரியாக பொலிசார் பூட்டததால் , அதனை திறந்து குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார்.
குறித்த சம்பவத்தை அடுத்து ரிசேர்வ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தப்பி சென்ற நபரை கடந்த இரு வார காலத்திற்கு மேலாக பொலிசார் தேடி வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராசாவின் தோட்டம் பகுதியில் மறைந்திருந்த போது பொலிசார் கைது செய்தனர்.  அதன் போதே அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: ஈழவன்