டுபாயில் கைதானவர்கள் கொழும்புக்கு கொண்டு வந்தது சி.ஐ.டி!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு(வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹாரானுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர் எனக் கருதப்படும் மொஹமட் மில்ஹான், இலங்கையிலிருந்து தப்பித்து டுபாய் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து இலங்கையர்கள் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இலங்கையிலிருந்து சென்ற சி.ஐ.டி. விசேட குழுவினர் குறித்த ஐவரையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு இலங்கை பாதுகாப்பு தரப்பினரின் கவனக்குறைவும் காரணம் என்ற விமர்சனங்கள் பலமாக இருக்கின்றபோதும், தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கவையாக அமைந்து வருகின்றது.

இதன்காரணமாக இலங்கையில் ஐ.எஸ். அமைப்பின் வலைப்பின்னல் தற்போதைக்கு ஏறக்குறைய நொருக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விமர்சகர்கள் தெரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor