முன்னாள் போராளியின் மனைவி, தங்கை சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு!

திருகோணமலையில் கைதான சந்தேகநபரின் மனைவியும், தங்கையும் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

அவர்களிடம் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைக்காக இவ்வழக்கை குற்ற புலனாய்வுத்துறை முன்னெடுக்கவுள்ளது.

திருகோணமலை, சேருநுவர, கிளிவெட்டி பாலத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை, சேருநுவர இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் ஒருவர், ரி-56 துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர், சேருநுவர பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜோசெப் பீட்டர் எனவும், அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டில் கிளிநொச்சி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக சந்தேகநபரின் வீட்டிலிருந்த அவரது மனைவி என தெரிவிக்கப்படும் 23 வயதான பெண் ஒருவரும் 28 வயதான அவரது சகோதரியும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor