தமிழகத்தில் நீட் பயிற்சி மையங்களில் கடும் சோதனை – 30 கோடி பறிமுதல்

தமிழகத்தில் செயற்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், வீடு மற்றும் நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கணக்கில் காட்டப்படாத 150 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நாமக்கல் தனியார் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், பள்ளி ஒன்றின் மண்டபத்தில் அசையா சொத்துகளின் ஆவணங்கள் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்திற்கு ஆசிரியர்களை பணிக்கு நியமித்துள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்