இம்ரான் கான் தப்புவாரா?

தென் தமிழக கிராமங்களில் பொதுவான ஓர் சொல்வடை உண்டு.
அதாவது, வயிறு பசிக்க உழைத்தவன் வயல் விளையுமா அல்லது அடுத்தவன் உழைப்பை பார்த்து வயிறு எரிய பொறாமைப்பட்டவன் வயல் விளையுமா? என கேட்பதுண்டு.

ஒரே நேரத்தில் அந்நியர்களிடமிருந்து விடுதலை வாங்கிய இரண்டு தேசங்களில் ஒன்று, உலகமே மதிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது. இன்னொன்று, அண்டை நாட்டின் மீதான வெறுப்பினால், தன்னைத் தானே அழித்துக் கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி, தேய்ந்து கொண்டே வருகிறது. இத்தனை வருடங்களாக, பாரதத்திற்கு நிகராக ஏதாவதொரு எண்ணைக் காட்ட வேண்டும் என்று, போலியாக ஜிடிபி வளர்ச்சியாகக் காட்டி வந்தனர். இப்பொழுது அதுவும் முடியாமல், உண்மையைச் சொல்லும்படி நிலைமை மாறி வருகிறது.
அதாவது கடந்த வருட வளர்ச்சி இலக்காக, 6.3 என நிர்ணயித்திருந்தார்கள். ஆனால், எட்ட முடிந்ததோ வெறும் 3.5% தான். தொழிற்துறை வளர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்ட, 7.6%த்திற்கு வெறும் 1.4% தான் எட்டியிருக்கிறார்கள். நம்பினால் நம்புங்கள்… பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகளை விட, பாகிஸ்தான் கால்நடை வளர்ச்சி தான் ஓரளவு சிறப்பாக இருக்கிறது என்று புள்ளிவிபரம் கொடுத்திருக்கிறார் இம்ரன்கான். அதாவது, ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அளவிற்குக் கூட அரசாங்கம் செயல்படவில்லை.
பாரதத்தில் எடுக்கப்பட்ட அதிரடி பொருளாதார  சீர்திருத்தங்களினால், பாகிஸ்தான் உடனடியாகச் சிக்கலில் மாட்டிக் கொண்டது. பாரதத்தின் கரன்ஸியைக் கள்ளத்தனமாக அடித்து அனுப்பியது தொடங்கி, பயங்கரவாதத்தைப் பரப்ப அந்நியக் கூலியாகச் செயல்பட்டது மற்றும் பாரதத்தில் கருப்புப் பண முதலைகளுக்கு ஏஜென்டாக இருந்தது வரை, பாகிஸ்தான் இந்தப் பிராந்தியத்தின் மிக மோசமான, நிலையில்லாத பொருளாதார ஊதாரியாக இருந்து வந்தது.
நண்பன் போல நடித்து, பாகிஸ்தான் பொருளாதாரத்தைச் சுரண்டி வந்த சீனாவும் கைவிட்டு விட்டது. இத்தனை நாள் சீனா ஒன்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கவில்லை. தன் வியாபாரத்திற்கு பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டது. பாரதத்தை பூச்சாண்டியாகக் காட்டி, தன் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்று காசு பார்த்து வந்தது.
அதனால் நிறைய கடனைக் கொடுத்துவிட்டு, வட்டிக்கு மேல் வட்டி வாங்கினாலும், இமயமலை வழியாக ஊடுருவி பாகிஸ்தானை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்று இது நாள் வரை பொறுத்திருந்தது. ஆனால், இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை மிகவும் வலுவாக இருப்பதால், அந்த வழியாக ஊடுறுவாமல் ஆங்காங்கே நாட்டின் உள்பகுதியை ஈடாகப் பெற்றுள்ளது. அதாவது, பாகிஸ்தான் தன் நாட்டினை கூறு போட்டு விற்கத் தொடங்கியிருக்கின்றது.
இந்தச் சூழலில் தான், இம்ரன்கான் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தான் மக்கள் அனைவரும் தங்கள் சொத்துப் பட்டியலை, ஜூன் 30ம் தேதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் வருமான வரியினை விதித்து வருவாயைக் கூட்ட முடிவெடுத்திருக்கிறார். நிஜமாகவே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான தொடக்கமான அறிவிப்பு தான்.
ஆனால், இதனை மக்களில் இருந்து, ஐஎஸ்ஐ – ராணுவம் வரை யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில், நிஜமாகவே பாகிஸ்தானில் சொத்து வைத்திருப்பவர்கள் நிறைய பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகளாகத் தான் இருப்பர். உள்நாட்டு கோடீஸ்வரர்கள் எல்லாரும் துபாய் மற்றும் ஐரோப்பாவில் சொத்துகளை வாங்கிப் போட்டிருக்கின்றனர். ஒரு முரணான, சிக்கலான சொத்துக் கணக்கு தான் வரும்.  இருந்தாலும் துணிச்சலான முயற்சி தான்.
இது தொடக்கமாகத் தான் இருக்க முடியும். நிஜமாகவே நாட்டை திவாலாவதிலிருந்து தப்ப வைக்க வேண்டுமென்றால், பாகிஸ்தான் முதலில் உள்ளூர் மற்றும் சர்வதேச பயங்கரவாதிகளுடனான தொடர்பை அடியோடு துண்டித்துக் கொள்ள வேண்டும். இதனை ராணுவ ஆட்சி கொண்டு சாதிக்கலாம் என்றால், ராணுவமே பயங்கரவாதிகளின் பிடியில் தான் இருக்கிறது அல்லது பயங்கரவாதிகள் தான் ராணுவத்தையே நடத்துகின்றனர்.
அடுத்ததாக, சற்றும் தயக்கமில்லாமல், உணவுப் பொருட்கள் தவிர மற்ற எல்லாப் பொருட்கள் மீதான வரிகளை 100%க்கும் மேல் கூட்ட வேண்டும். குறிப்பாக பெட்ரோல் டீசல் வரிகளை. பாகிஸ்தான் இதுவரை காஷ்மீர் விசயத்திற்குச் செய்து வந்த செலவை சேமித்து வைத்திருந்தாலே போதும். பாகிஸ்தான் நல்லதொரு வளர்ந்த நாடாகியிருக்கும். பாரதமும் வீண் செலவினைச் செய்திருக்க வேண்டிய அவசியமின்றி, தெற்காசிய பிராந்தியமே செழிப்பாக இருந்திருக்கும்.
இத்தனை சீர்திருத்தம் செய்வதெல்லாம், பாகிஸ்தான் போன்ற பயங்கரவாதிகள் இருக்கும் நாட்டில் சாத்தியமே இல்லை தான். இப்பொழுது அறிவித்திருக்கும் இந்த ஒற்றைச் சீர்திருத்தத்தைச் செய்து விட்டால் கூட, இம்ரன்கான் புதிய பாகிஸ்தானின் தந்தை என்று வரலாறு போற்றும். ஆனால், அதுவரையெல்லாம் பாகிஸ்தானைக் கூடாரமாகக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகள் பொறுத்திருக்க மாட்டார்கள். நிச்சியம் இம்ரான்கானை மறுமைக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

 

எனினும், பாகிஸ்தான் திவாலாவது தெற்காசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல! அண்டை நாடுகளோ, வளர்ந்த நாடுகளோ உதவி செய்யும் அளவிற்கு பாகிஸ்தான் நம்பிக்கைக்குரிய நாடுமல்ல! பார்க்கலாம் மோடி போன்ற உலகத் தலைவர்கள் இதற்கான தீர்வினை எப்படி எடுக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 தன் தேசம் மட்டுமல்ல, தன் அண்டை தேசத்திற்கான நேர்மறையான தீர்வையும் சேர்த்துக் கொடுப்பவர்களே உலக வரலாற்றில் நிலைத்திருப்பார்கள்.

Recommended For You

About the Author: Editor