நாங்கள் ஆட்சியமைத்தால் குறைந்த விலையில் உணவு தருவோம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் உணவு வழங்கப்படும் என சிவசேனா வாக்குறுதி வழங்கியுள்ளது.

மஹராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்திய தாக்கரே பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன்போதே மேற்படி வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தெரிவித்த அவர், “10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க வாக்குறுதி அளித்துள்ளோம். அ.தி.மு.க உள்ளிட்ட எந்த ஒரு கட்சியையும் பார்த்து நாங்கள் இந்த வாக்குறுதியைக் கூறவில்லை.

எங்கள் கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் கனவு அது. மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவது என்பதே தாக்கரேவின் விருப்பம்.

ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் கடைகளை அப்போதே அவர் தொடங்கினார். அவரது அந்தக் கனவை நிறைவேற்றுவது எங்கள் கடமை. அதற்காகவே இந்த வாக்குறுதியை அளித்துள்ளோம்.

மும்பையில் மட்டுமின்றி மஹராஷ்டிரா முழுவதும் இதனைச் செயல்படுத்துவோம். குறைந்த விலையில் உணவு என்பது இன்றைய காலத்தில் சாதாரண மக்களின் தேவையாக உள்ளது.

உணவு சமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பயன்படுத்துவோம். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்