குர்திஸ் படை மீதான துருக்கியின் தாக்குதல் தொடர்கிறது!!

வடக்கு சிரியாவில் நிலைகொண்டுள்ள குர்திஸ் படையினர் மீது துருக்கி இராணுவம் ஆரம்பித்த தாக்குதல்கள் தொடர்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் சிக்கி பத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வடக்கு சிரியாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஸ் படையான, சிரிய ஜனநாயகப் படையோடு துருக்கி நேரடியான மோதலை நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளது.

சிரியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை ஜனாதிபதி ட்ரம்ப் மீளப்பெற்ற நிலையில், இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுவது பலத்த சந்தேகத்தை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், தாக்குதல்களில் ஈடுபடுமாறு தாம் துருக்கிக்கு ஒப்புதல் வழங்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் மோதல்களில் சிக்கி, இதுவரை 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பல குர்திஸ் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கி சார்பில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளதை துருக்கி இராணுவம் உறுதி செய்துள்ளது.

தாக்குதல் அதிகரிக்கும் அச்சம் நிலவுவதால் வடக்கு சிரியாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கிக்கு எதிராக பொருளாதார தடையைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor