எம்மை புறக்கணித்து உங்களால் வெல்லமுடியாது.

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டை தட்டிக் கேட்கும் தகுதியும், துணிவும் கூட்டணிக்கு மட்டுமே உண்டு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆணந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்று வெற்றிபெற்றுள்ளதா? என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கும், தமிழ் அமைப்புக்கள் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

1972ல் தமிழர் கூட்டணி உருவாகி 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணியானதற்கு பின் 2004வரை எமது தலைவர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், தங்கத்துரை, நீலன் திருச்செல்வம், திருமதி யோகேஸ்வரன் சிவபாலன், நடேசு, வேல்முருகு மற்றும் பலரின் உயிர்கள் எமது விடுதலை இயக்கங்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், மற்றும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் இரையாகிய பின்னரும் கூட்டணி சோர்ந்து போகாது தனது இலட்சியப் பயணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

இந்த காலகட்டத்தில்தான் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாகாண சபை உருவாக்கம் பெற்றது. விடுதலை இயக்கங்களும் பலமுடையதாக இருந்தன. தமிழ் மக்களும் பேரம்பேசும் சக்தியுடன் இருந்தனர். 2004ம் ஆண்டு பதவி மோகம் கொண்ட சுயநலனுடன் செயற்பட்ட, ஒரு சிலரது நடவடிக்கைகளால் கூட்டணி திட்டமிட்ட துரோகம்கலந்த சதியால் முடக்கப்பட்டது.

1972 இலிருந்து 2004வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களித்தார்கள். 2004ம் ஆண்டு கட்சியை பாதுகாக்க நாம் நீதிமன்றை நாடியிருந்தபடியால் சுயேட்சையாகப் போட்டியிட்டோம். அதனால் எந்த ஒரு தமிழ் மகனும் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை. அப்போதுதான் இணைந்திருந்த வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டதும், சர்வதேசமே பார்த்து வியந்துபோன தமிழீழ விடுதலைப் புலிகளும் தோற்கடிக்கப்பட்டார்கள்!

தந்தை செல்வா – தலைவர் ஜ.Pஜீ. பொன்னம்பலம் மற்றும் மலையகத் தமிழ்த் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டணி 2004 தொடக்கம் 2010 வரை, அரசியலில் கூட்டுச் சதியால் திட்டமிடப்பட்டு ஒதுக்கப்பட்டபோதுதான், இவ்வளவும் நடந்தன. அதன் பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளாதவாறு திட்டமிடப்பட்ட பரப்புரைகள் மூலம் அதன் பலத்தைக் குறைத்தார்கள். இதன்மூலம்  தமிழ் மக்களின் பலமும் குறைந்தது.

தற்போதுகூட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு எம்மை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகின்றது. இதே பல்கலைக்கழக மாணவர்கள் எம்மை ஒதுக்கிவைத்துவிட்டு 2004ம் ஆண்டு தேர்தலில் அதி உக்கிரமமாக எங்களுக்கு எதிராக குரல் கொடுத்து, எதிராக செயற்பட்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை, ஜனநாயக விழுமியங்களை மீறி ஒரு சிலருக்கு பெற்றுக் கொடுத்தனர்.

அது தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி நடந்த தேர்தல் எனவும், மீண்டும் மறு வாக்குப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அனைத்தும் குரல் கொடுத்தன. ஆனால் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை. இவ்வாறானவர்கள்தான் அன்றைய அரசுக்கும் தேவைப்பட்டார்கள் அதனால்தான் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்;, ஜனநாயகரீதியில் எதனையும் தட்டிக் கேட்க முடியாமல், முள்ளிவாய்க்கால் வரை எமது மக்கள் சென்று அவலப்பட்டதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

மீண்டும் அதே பல்கலை கழக மாணவர் அமைப்பு, இப்போது அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேசுகிறது. ஓன்றை மட்டும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் புரிந்து கொள்ளவேண்டும். அரசாங்கத்தின் அத்துமீறல்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றை ஒரு ஜனநாயக ரீதியில் போராடும் அமைப்பினால் மட்டுமே தட்டிக் கேட்க முடியும். ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் பேரம் பேசி தட்டிக் கேட்க முடியாது.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதசெயற்பாடுகளை சுட்டிக் காட்டும்போது அரசாங்கம் இவர்கள் பக்கம் திரும்பி இவர்களின் ஜனநாயக விரோத செயற்பாடுகளைப் பட்டியல்போட்டால் கேட்டவர்கள் வாய்மூடி மௌனியாக இருக்க வேண்டும். அந்த நிலைமைதான் யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் முடிந்தும் இன்றுவரையும் தொடர்கின்றது.

அவ்வாறானவர்கள் தான் பாராளுமன்றம் வரவேண்டும் என்று அரசும் விரும்பும். எம்மைப் போன்ற ஜனநாயகவாதிகள் பாராளுமன்ற அரசியலில் பலமாவதை எந்த அரசும் விரும்பாது. அரசாங்கத்தின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறுதான் தெரிந்தோ தெரியாமலோ பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பும் ஏனைய அமைப்புகளும் செயற்படுகின்றன.

எமது தலைவர்கள் ஜனநாயகவாதிகளாக இருந்து மேற்கொண்ட நடவடிக்கையால்தான், 1987ல் நடைபெற்ற வடமாராட்சித் தாக்குதல்களின்போது அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, இந்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தினால் உடனடியாக அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நேர்ந்தது.

ஆனால் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின போது, 22 பேர் பாராளுமன்றில் இருந்தும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற கோர நிகழ்வை தடுக்க முடியாமல் போனது ஏன்? ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டின் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசும் பதிலளிக்காது, சர்வதேச சமுகமும் தட்டிக்கழித்துவிடும். ஆனால் அவ்வாறானவற்றைத் தட்டிக் கேட்கும் தகுதியும், துணிவும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மட்டும்தான் உண்டு.

இது தெரிந்ததால் தான் என்னவோ, அன்றைய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு நகரிலேயே, எமது தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எமது தலைவர்களின் கருத்துக்களுக்கு எவ்வாறு பதில்சொல்வது அல்லது அவர்களது வாயை எப்படி மூடவைப்பது என தடுமாறிக் கொண்டு  மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு, ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் துணை போனார்கள்.

இப்போதும் தமிழர் விடுதலைக் கூட்டணி பலமடைவதை அரசும் விரும்புவதில்லை, தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போகும் அமைப்புகளும் விரும்புவதில்லை. அதனால்தான் எமது கட்சி திட்டமிட்டே ஒதுக்கப்படுகிறது. இருந்தும் எமது ஜனநாயகத்தின் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். எமது கட்சி என்று பலமடைகின்றதோ அன்று நிச்சயம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கிட்டும்.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கௌவும், ஒரு நாள் நிச்சயம் தர்மம் வெல்லும்.என குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்