
ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய்க் கப்பல்கள் இன்று வெடித்துச் சிதறியுள்ளன. தீப்பிடித்து எரிகின்ற கப்பல்களில் இருந்து கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கொகுபா (Kokuka) கப்பலில் இருந்து 21 பேரும் ஃபுரொன்ட் அல்ரயர் (Front Altair) கப்பலில் இருந்து 23 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தகர்க்கப்பட்ட கப்பல்களில் இருந்து 44 பணியாளர்கள் ஈரான் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இரு கப்பல்களும் குண்டுகள் வைக்கப்பட்டே தகர்க்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்ற அதேவேளை கப்பல்கள் வெடித்தவுடன் இரு இடர்அறிவிப்புக்கள் தமக்குக் கிடைத்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு அருகில் நான்கு எண்ணெய் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒருமாத இடைவெளியில் இன்று இரு எண்ணெய்க் கப்பல்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளன.
நோர்வேக்குச் சொந்தமான ஃபுரொன்ட் அல்ரயர் கப்பல் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு தர்க்கப்பட்டதாக நோர்வே கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஃபுரொன்ட் அல்ரயர் கப்பலை குத்தகை அடிப்படையில் பயன்படுத்திவந்த தாய்வான் எண்ணெய் நிறுவனமான CPC Corp இன் செய்தித் தொடர்பாளரான Wu I-fang தெரிவிக்கையில்; கப்பல் 75,000 ரன் நப்தாவை சுமந்துகொண்டு சென்றபோது ரோபிடோ தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிங்கபூரைத் தளமாகக் கொண்டிருக்கும் BSM கப்பல் நிறுவனமே தாக்குதலுக்குள்ளான கொகுபா கப்பலை பயன்படுத்துகின்றது.
தாக்குதல் குறித்துத் கருத்துத் தெரிவித்த அந்தநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்; குண்டுத் தாக்குதலின் மூலம் கப்பலுக்கு பகுதியளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மெத்தனோல் ஏற்றிவந்த கப்பல் மிதக்கும் நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.