தீபாவளி: தங்கம் விற்பனை எப்படி?

கடந்த காலங்களைக் காட்டிலும் 2019 பண்டிகை காலங்களில் 50 சதவிகிதம் வரை தங்க விற்பனை சரியும் என்று இந்தியத் தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தங்க விற்பனைக்கும், தீபாவளி, அக்‌ஷய திரிதியை ஆகிய பண்டிகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த பண்டிகை நாட்களில் எது வாங்கினாலும் அது இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்களில் மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு ஒரு கிராம் தங்கமாவது வாங்குவார்கள்.

இதனால் இந்த காலங்களில் தங்கம், வெள்ளி விற்பனை அதிகமாக இருக்கும். சமீப நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சர்வதேச சந்தைகளில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

திருவிழா மற்றும் திருமண சீசன்கள் தொடங்கிவிட்ட நிலையிலும் தங்க விற்பனை மந்தமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 40 டன் தங்கம் விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு 50 சதவிகிதம் விற்பனை குறையும் என இந்தியத் தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் கூறியுள்ளது.

திருமண தேவை, பண்டிகை கால தேவை மற்றும் வழக்கமான தேவைக்காக பொதுமக்கள் தங்கத்தை வாங்குவார்கள், சந்தையில் பணப்புழக்க நெருக்கடி காரணமாக வழக்கமான தேவை ஏற்கனவே குறைவாக உள்ளதாகவும், தங்கத்தில் முதலீடு செய்வதை மக்கள் தவிர்ப்பதாகவும் இந்தியத் தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.29,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.7 அதிகரித்து ரூ.3,665க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor