வடக்கின் வாக்குகளுக்காகவே விமானநிலைய தரமுயர்த்தல்- நாமல்!!

ராஜபக்ஷ ஆட்சியின் போது அபிவிருத்தி திட்டங்களை விமர்சித்த தரப்பினர் இன்று வடக்கின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முனைவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை அக்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் , விவசாய நிலமாக இருந்து இந்த நாடு கடந்த 5 வருடங்களில் தரிசு நிலமாக மாறியுள்ளதாக கூறிய நாமல், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் கொள்ளையர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக மத்தல விமான நிலையம் மஹிந்த ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்டதால் அதனை சரியில்லை எனக்கூறிய நல்லாட்சி தற்போது பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பெயரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் பாதைகள் மற்றும் அதிவேக சாலைகளை அமைத்து அதனூடாக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அறுவடைகளை நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திற்கும் கொண்டு சென்று சர்வதேசத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்பதே தங்களது திட்டமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாட்டிற்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒன்று தேவையில்லை என கூறிய ஐக்கிய தேசிய கட்சி தற்போது வடக்கின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பெயரிட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor