கொள்கைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் முடிவு

வரலாற்று ரீதியாக தங்களது கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபத தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் அமையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சீ.மு.இராசமாணிக்கத்தின் 45வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பலவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த விமர்சனங்களைக் கேட்டு தளர்வடைய வேண்டிய அவசியமில்லை என்றும் ஏனெனில் தாங்கள் மட்டுமே தமிழ் மக்களை கொள்கையின் அடிப்படையில் வழிநடத்துகின்ற ஒரே கட்சியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும் தந்தை செல்வா, இராசமாணிக்கம் போன்ற தலைவர்களால் வழிநடத்தப்பட்ட, தற்போது சம்பந்தனால் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமது கட்சியின் கொள்கைகள் சாயம் போகாத உறுதியான கொள்கைகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரலாற்றுத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்ற தமது கட்சி வெறுமனே செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது என குறிப்பிட்டார்.

வரலாற்று அடிப்படையிலே தங்களது கொள்கைகளை யார் யார் அங்கீகரிக்க இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற்கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முடிவினை எடுக்கும் என்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor