ரயில்வே ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (07) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பொதுமக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்காத வகையில் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது அனைத்து தொழிற்சங்கங்களினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தி அவற்றுக்கு வழங்க முடியுமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி என்ற வகையில் தான் தலையீடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை அசௌகரியத்திற்குள்ளாக்கக் கூடாதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில், தமது சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு தெரிவித்து, ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடந்த 12 நாட்களுக்காக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டை நிறைவு செய்துள்ளனர்.

இதேவேளை, இன்று (07) காலை முதல் 28 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவிக்கையில், வேலைநிறுத்தத்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும், ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பின்னர் பணிக்கு திரும்பிய ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரால் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor