இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை மற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ரி-20 தொடரின் முதல் போட்டி இன்று லாகூரில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இதனால் இலங்கை அணி 5 ஓவர்களில் 50 ஓட்டங்களை பெற, அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த தனுஷ்க குணதிலக்க 7.5 ஆவது ஓவரில் ஆறு ஓட்டம் விளாசி அரைசதம் கடந்தார்.
தொடர்ந்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 9.4 ஆவது ஓவரில் சடப் கானின் பந்து வீச்சில் மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம் 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 84 ஓட்டங்கள‍ை குவித்தது. பின்னர் 12 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களைப் பெற்றது.
இதன் பின்னர் 14.4 ஆவது ஓவரில் அவிஷ்க பெர்ணான்டோ மொத்தமாக 33 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை குவித்தது. இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில், 166 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது.
பாகிஸ்தான் அணி சார்பாக இப்திகார் அஹமட் 25 ஓட்டங்களையும், அணித்தலைவர் சர்பராஸ் அஹமட் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமான பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக, நுவான் பிரதீப் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அத்துடன் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், குசுன் ராஜித ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி ரி-20 போட்டியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Recommended For You

About the Author: Editor