காணாமல்போன இந்தியவிமானம் கண்டுபிடிப்பு

காணாமல் போன இந்திய விமானப்படை விமானம், அருணாசல பிரதேசத்தில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் குறித்த எந்ததொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த 4ஆம் திகதி, 13 பேருடன் காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி 9ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டரின் உதவியுடன் விமானப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோதே ஏ.என்.32 ரக விமானம் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசாம் மாநிலம்- ஜோர்கத் விமானப்படை தளத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம், கடந்த 4ஆம் திகதி, 13 பேருடன் காணாமல் போனது.

இந்நிலையில் காணாமல்போன விமானம் குறித்து எந்ததொரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், இராணுவம் மற்றும் இந்தோ- திபெத் பாதுகாப்பு படையினர் இன்று வரை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்து, அதனுடைய ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் ஊடாக விமானத்தை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஆனாலும் தேடுதல் பணியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாதமையினால், விமான ஆராய்ச்சி மையத்தின் 5000 கண்காணிப்பு விமானங்கள் மற்றும் NTRO உளவு செயற்கைக்கோள்கள் ஆகியவற்றின் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த விமானம் சிதைவடைந்த நிலையில் அருணாசல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor