கஞ்சாக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் அமெரிக்காவில் கடத்திக் கொலை!

கலிபோர்னியாவின் சாந்தாகுரூஸில் உள்ள வீட்டில் வைத்துக் கடத்தப்பட்ட 50 வயதான துஷார் ஆத்ரே என்ற இந்திய வம்சாவளி அமெரிக்கத் தொழிலதிபர் அவரது காருக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் தொழில்நுட்ப வர்த்தகத்தில் தொழிலதிபரான செல்வந்தர் துஷார் ஆத்ரே 4 நாட்களுக்கு முன்பாக கடத்தப்பட்டார்.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் தனது காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆத்ரேநெட் நிறுவனத்தின் உரிமையாளரான துஷார் ஆத்ரே அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்களால் அவரது வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரில் கடத்திச் செல்லப்பட்டார்.

இது குறித்து வீட்டில் இருந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சாந்தாகுரூஸ் மலைப்பகுதியில் பி.எம்.டபிள்யூ காரில் ஒருவர் இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்ட பொலிஸார், அது துஷார் ஆத்ரே என்ற கடத்தப்பட்ட தொழிலதிபர் என உறுதி செய்தனர்.

இவர் ஓராண்டுக்கு முன்பாக கஞ்சா வர்த்தகத்தில் இறங்கியுள்ளார். கஞ்சா வர்த்தகத்தில் நிழல் உலக தாதக்களின் ஆதிக்கம் அதிகம். இந்த வர்த்தகத்தில் சிறிய பிசகு ஏற்பட்டாலும் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என ஆத்ரேவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor