அமெரிக்கா – ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை நிறுவ தீவிர முயற்சி!

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென தனியாக இருக்கை உருவாக்குவதற்காக தமிழர்கள் மேற்கொண்ட முயற்சியால் இதுவரை 20 இலட்சம் டொலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை உருவாக்க ஹூஸ்டன் தமிழ் கல்வி இருக்கை அமைப்பு முயன்று வருகிறது. கடந்த 2018ஆ ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அரசு சாராத ஒரு தொண்டு நிறுவனமாகும்.

இந்த அமைப்பின் உறுப்பினர்களான சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், டாக்டர் எஸ்.ஜி.அப்பன், சொக்கலிங்கம் நாராயணன், பெருமாள் அண்ணாமலை, நாகமாணிக்கம் கணேசன், துபில் வி நரசிம்மன், டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் இந்த நிதி திரட்டும் பணிகள் கிரேட் ஹூஸ்டன் பகுதி டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்தது.

உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதையடுத்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான பணிகளை அங்குள்ள தமிழ்ச் சங்கம் மூலம் தமிழர்கள் தொடங்கினர்.

ஹூஸ்டன் பல்கலைக்கழக்தில் தமிழ் இருக்கை அமைக்க இந்திய ரூபா மதிப்பில் 42 கோடி தேவைப்படுகிறது. இதில் 21 கோடியை அமெரிக்க அரசு வழங்கும். தமிழர்கள் சார்பில் 21 கோடி அளிக்க வேண்டும். அந்தவகையில் தற்போது 14.71 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பன்முக கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் குழந்தைகள் அமெரிக்கப் பல்கலையில் படித்தாலும் செழுமை மிக்க தமிழ் கலாச்சாரம், மொழி, இலக்கியம் ஆகியவற்றைத் தமிழர்களிடம் மட்டுமின்றி அமெரிக்க மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு பணிகளை ஹூஸ்டன் தமிழ் கல்வி இருக்கை செய்து வருகிறது என அந்த அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழின் சிறப்பையும், தமிழர்களின் தனித்துவமான கலாசாரத்தையும் நமது மாணவர்கள் கற்கவும், பல்வேறு விடயங்களையும் அறியவும் இந்த தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவானால் தமிழ்த் துறையில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் உலக அளவில் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor