பிக்பாஸ் 3’விஜய்டிவியின் தோசை மாவு மெனுக்கள்’

இன்றும் ஒரு சுமாரான நாள். வனிதா வீட்டில் இருந்தும் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதே ஆச்சரியம்.

இது தவிர இப்போதெல்லாம் நிகழ்ச்சியின் இடையில் ஏராளமான விளம்பரங்கள் வேறு வந்து கொட்டாவியைக் கிளப்புகின்றன.

பிக்பாஸ் கல்லா கட்டும் பணியின் உச்சத்தில் இருக்கிறார் போலிருக்கிறது.

102-ம் நாள் காலை. “ஆலுமா டோலுமா’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. கூடாரத்தில் நுழையும் ஒட்டகம் மாதிரி இன்று டான்ஸர் பாய்ஸ் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டார்கள்.

ஏறத்தாழ வீட்டில் இருந்த அனைவருமே டான்ஸர்களுடன் இணைந்து நடனமாடினார்கள். நாற்காலிகளைச் சுற்றி ஓடினார்கள். வனிதா மட்டும் ‘பற்ற வைத்த’ களைப்பில் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சேரன் ஐந்து ஜோக் அடித்திருந்தார் என்கிற வரலாற்றுத் தகவலை முன்பு பார்த்தோம். இப்போது ஆறாவது ஜோக்கும் அடிக்க முயன்றார். ‘நான் உன்னை நாமினேட் பண்ணேன்’ என்று ஷெரீனிடம் அவர் விளையாட்டாக சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கு சாக்ஷிதான் சாட்சி.

“அப்படியா.. என்னையா நாமினேட் பண்ணீங்க?” என்று அதிர்ச்சியே இல்லாத அதிர்ச்சியுடன் ஷெரீன் கேட்க “லூஸே.. நீதான் பைனல் வரணும்னு சொல்லியிருக்கேன்.

வெளில போய் பாரு” என்றார் சேரன். “ஆன்ஸர் பேப்பர்ல வெறும் ரோல் நம்பர் எழுதினதுக்கே நூறு மார்க் போட்ட பேராசானே.. உம்மா” என்று ஷெரீன் பரவசத்துடன் தந்த பாராட்டை ஏற்றுக் கொண்டார் சேரன்.

‘எங்கேயோ கேட்ட குரல்’ என்பது அடுத்த டாஸ்க். பிக்பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களின் உரையாடல்களை ‘ஆடியோ’ வழியாக ஒலிபரப்புவார்கள். (பார்வையாளர்களுக்கு மட்டும் வீடியோவுடன் காட்டப்படும்).

போட்டியாளர்கள் அதை சரியாக நினைவுகூர வேண்டும். யார், யார் பேசியது, எந்த இடத்தில் நடந்தது என்பதையெல்லாம் தனித்தனியாக ஒரு தாளில் எழுத வேண்டும். பிறகு விடைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

“நீ Bold ஆன பொண்ணு.. ஆனா கொஞ்சம் Old ஆன பொண்ணு” என்று வந்த புதிதில் மீராவை, சாண்டி கலாய்த்தது பிரபலமான டயலாக்.

இதை முகினால் சரியாக நினைவுகூர முடியவில்லை. ‘மீராவா.. அல்லது சாக்ஷியைப் பற்றியதா… என்று சந்தேகமாக இழுத்தார். ஆனால் சாண்டி இதை சரியாக சொல்லி விட்டார். கிண்டல் செய்தது அவர் என்பதால்.

போட்டியாளர்களால் ஏன் இவற்றை நினைவுகூர முடியவில்லை என்று நமக்கு சந்தேகம் வரலாம். அங்கு 24 மணி நேரம் நடப்பதை நமக்கு ஒரு மணி நேரமாக சுருக்கி காண்பிக்கிறார்கள்.

எனவே நமக்கு ஒருவேளை நினைவிருந்தால் கூட போட்டியாளர்களுக்கு அத்தனை உரையாடல்களையும் நினைவில் வைத்துக் கொள்வது கடினம்தான். அபாரமான ஞாபகசக்தி இதற்கு தேவை. ஆனால் சாண்டி கூட தான் பேசிய வசனத்தை மாற்றிச் சொன்னார்.

ஷெரீன் சுட்ட சப்பாத்தியில் லியா கத்தியால் குத்தியது, நைனாவின் அரை டிராயரை கவின் கண்டுபிடித்து விசாரித்தது போன்ற வரலாற்றுச் சம்பவங்கள் நினைவுகூரப்பட்டன.

‘உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா.. என்று ஷெரீனை நோக்கி தர்ஷன் ரொமாண்டிக்காக பாடியதை ‘நான் பாத்ரூம் போகும் போது நீ சுச்சாவா. கக்காவா,” என்று மாற்றிப்பாடி அந்த ரொமான்ஸை நாறடித்த கவின் தொடர்பான ஒலிச்சித்திரங்களும் வந்தன.

இந்த டாஸ்க்கில் ஆச்சரியகரமாக ஷெரீன் வென்றார். “அப்படியே வெயிட் பண்ணுங்க. பிக்பாஸ் இப்போ ஏதாவது கவுண்ட்டர் டயலாக் சொல்வார்” என்று சாண்டி சொல்ல “அந்தப் பய வேற என்ன சொல்லப் போறான்.. ‘அன்றாட வேலைகளைப் பாருங்க”-ன்னு சொல்வான்.

நான் பார்த்து வளர்ந்த பய’ என்று வனிதா அலட்சியமாக சொல்ல, ‘வனிதா சொல்றதை எல்லோரும் கேளுங்க’ என்று பம்மிய குரலில் பிக்பாஸ் சொன்னார். ஆஸ்கர் விருது பெற்ற மகிழ்ச்சியில் வனிதா துள்ளிக் குதித்தார். (அடேய். பிக்பாஸூ.. நீ வனிதாவோட அடிமைன்றதை இப்படியா சுயவாக்குமூலமா தரணும்?!).

அடுத்த டாஸ்க் ‘அறிந்தும் அறியாமலும். தெரிந்தும் தெரியாமலும்’. அடுத்த சில மணி நேரங்களுக்கு என்ன நடந்தாலும் போட்டியாளர்கள் அதற்கு ரியாக்ட் செய்யக்கூடாதாம். கண் தெரியாத மாதிரி, காது கேட்காத மாதிரி அமைதியாக இருக்க வேண்டுமாம்.

சில விருந்தினர்கள் வந்தார்கள். விஜய் டிவியிடம் ஒரு கெட்ட வழக்கம் இருக்கிறது. ஒரே அரிசி மாவில், இட்லி, தோசை, ஊத்தப்பம், மசால்தோசை என்று விதம்விதமாக ஹோட்டல்காரர்கள் செய்வதைப் போல ஒரு சில குறிப்பிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்களை, நடிகர்கள் என்று அதே நிலைய வித்வான்களை வைத்துக் கொண்டு ஏறத்தாழ அனைத்து நிகழ்ச்சிகளையும் நிரப்பி விடுவார்கள். இதனால் திரும்பத் திரும்ப பார்த்த முகங்களையே பார்க்கும் சலிப்பு ஏற்படும்.

தாடி பாலாஜி, மாகபா, ரியோ, ரக்ஷன் ஆகியோர் உள்ளே வந்தார்கள். வீட்டில் உள்ள அனைவரும் இவர்களிடம் எவ்வித ரியாக்ஷனையும் காட்டக்கூடாது. ஆனால் பஸ்ஸர் அடித்த பிறகுதான் இதைப் பின்பற்ற வேண்டும் என்கிற குழப்பம் சிலரிடம் நிலவியதால் சாண்டி உள்ளிட்டவர்கள் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தார்கள். ஒரு சந்தைக் கடையே உள்ளே வந்தது போன்ற கூச்சல், குழப்பம். இதில் பிரியங்காவின் குரல்தான் அனைவரின் குரல்களையும் மீறி ஒலித்தது.

சாண்டி விஜய்டிவியின் செல்லப்பிள்ளைகளுள் ஒருவர் என்பதால் அவரை அனைவருக்கும் தெரிந்திருந்தது. அப்படியே கட்டி தூக்கிச் சென்றார்கள். ரியோ, மாகப, ரக்ஷன் ஆகியோர் ஷெரீனின் பரம பக்தர்கள் போல. அவர் கை கொடுத்தவுடன் தன்னுடைய கையை கழுவாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமளவிற்கு தீவிரமான ரசிகர்களாக இருந்தார்கள்.

சாண்டியை தனியாக ஓரங்கட்டிய பிரியங்கா.. ‘இந்த சீஸன் வேற லெவல்.. நீ எங்கேயோ போகப் போற” என்று கமலைப் போலவே பில்டப் கட்டிக் கொண்டிருந்தார். பஸ்ஸர் ஒலிக்க ஆரம்பித்தது. பிக்பாஸ் வீட்டினர் அமைதியைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்க, அவர்களை ரியாக்ட் செய்ய வைக்கும் பல ஜாலியான முயற்சிகளை விருந்தினர்கள் செய்தார்கள்.

“நீ ஒரு டான்ஸர்.. நானும் ஒரு டான்ஸர். என் கிட்ட பேசாம இன்ஸல்ட் பண்ணாத” என்று பாலாஜி, சாண்டியிடம் ஜாலியாக கோபித்துக் கொள்ள, “நீ இப்ப.. டான்ஸையே இன்ஸல்ட் பண்றே” என்று சரியான கவுண்ட்டரை டைமிங்கில் கொடுத்தார் ரியோ.

“லாஸ்லியா –ன்னா பாத்ரூம்லதானே இருக்கணும். வாங்க போய்ப் பார்க்கலாம்” என்று கலாய்க்க ஆரம்பித்தார் பிரியங்கா. (பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது மாதிரி கவினோடு சேர்ந்து லியாவும் நாறிப்போன கதை இது). கக்கூஸ் ஏரியாவிற்குள் சென்று இவர்களின் அலப்பறைகளைத் தொடர்ந்தார்கள்.

‘சாண்டிமேன்’ விட்ட ஃபேண்ட்டஸி கதை ரீல்களை எல்லாம் ரியோ கிண்டலடிக்க, “அதை விடுங்க. அதைப் போய் ஒருத்தர் சீரியஸா கேட்டிருந்தார் தெரியுமா.. அவரைச் சொல்லணும்” என்று சேரனை இழுத்து கலாய்த்தார் மாகபா.

இதற்கிடையில் பிரியங்கா அமர்ந்திருந்த சோபாவின் முனை ஒடிய, ‘அடிப்பாவி நூறு நாள் தாங்கின சோபாவை வந்த ஒரே நாள்ல ஒடிச்சிட்டியே” என்று ரியோ கலாய்க்க, ‘இந்த வீட்ல உடைக்கறதுல்லாம் முகின் வேலை. நீ ஏன் இதைப் பண்ணே?” என்று பாலாஜியும் இந்தக் கிண்டலில் இணைந்து கொண்டார்.

அடுத்ததாக விஜய் டிவியில் வரவிருக்கும் அடுத்த பிரம்மாண்ட கேம் ஷோவைப் பற்றிய அறிமுகத்தை பிரியங்காவும் மாகபாவும் சொல்லத் துவங்கினார்கள். (சரி. பிக்பாஸ் முடிஞ்சவுடனே அடுத்த பிஸ்னஸ்ஸை பார்க்கணுமில்லையா?! அதையும் இன்னொரு பிஸ்னஸ்க்குள்ள சொல்லி யூஸ் பண்றது சானலோட தரமான பிளான்).

“சுவர் விளையாட்டைப் பற்றி ஒரு சுவரே வந்து சொல்லுதா?” என்று ரியோ கலாய்க்க ஆரம்பிக்க, ‘மெட்ராஸ் சுவர் காவு கொடுத்துடுச்சு.. இந்தச் சுவர் காசு கொடுக்கப் போவுது” என்று பஞ்ச் டயலாக் பேசினார் பிரியங்கா.

பிறகு இந்த ஆட்டத்தைப் பற்றி அறிமுகம் செய்தார்கள் பிரியங்காவும் மாகபாவும். என்னதான் சுற்றிச் சுற்றி சொன்னாலும் இது வேறென்ன. சூதாட்டம்தான். பொது அறிவுக் கேள்விகளும் இருக்கும் என்பது ஊறுகாய் போல. எப்படியும் வந்தவர்கள் அதிகம் ஜெயிக்க முடியாது. ஏனெனில் விஜய்டிவியின் உருட்டு அப்படி இருக்கும்.

பிரியங்கா நிறைய அலட்டினாலும் “இன்னமும் இதன் விதிகள் பற்றி எங்களுக்கே சரியாத் தெரியாது” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் மாகபா. “இது பத்தி ஒரு பிரமோ வீடியோ இருக்கு. அதைப் பார்க்கலாம்” என்று பிரியங்கா சொன்னவுடன் “அப்ப இதுவரைக்கும் டைமை வேஸ்ட் பண்ணியிருக்காம அதை முதல்லயே போட்டிருக்கலாம்ல” என்று சேரன் டைமிங்காக ஜோக்கடித்தார். (அப்பாடா!.. அந்த ஆறாவது ஜோக்கை இப்போது சேரன் சொல்லியே விட்டார். வாழ்த்துகள் சேரன்!).

போட்டியின் பரிசுத்தொகை உள்ளிட்ட விவரங்களை அறிவிக்கும் போது சாக்ஷி தந்த முகபாவங்களை வைத்தே பத்து பதினைந்து மீம்ஸ் வீடியோக்களை தயாரிக்கலாம் போலிருந்தது. ‘வாவ்’.. என்று முகத்திலேயே நடனமாடியது முதல் பல கொனஷ்டையான எக்ஸ்பிரஷன்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். (தப்பிச்சடா கவினு!).

இந்தப் போட்டிக்காக போலந்திலிருந்து பந்துகளை இறக்குமதி செய்திருக்கிறார்களாம். ஆசியாவிலேயே இது மிகப் பெரிய போட்டியாம். (அடிங்கடா. அடிங்கடா. எவ்ள அடிச்சாலும் நாங்க தாங்குவோம்!).

அடுத்ததாக இறுதிப் போட்டியாளர்கள் நால்வரும் ‘பிக்பாஸில் சிறந்த போட்டியாளர்களாக ஆவது எப்படி?” என்கிற டியூஷனை எடுப்பார்களாம். (நேரத்தை இழுக்கறது சரி.. அதுல ஒரு லாஜிக்காவது வேண்டாமாடா?!).ஃ

“எல்லோரிடமும் ஜாலியா ஜம்முனு இருங்க.. சண்டை வந்தா ‘கம்முன்னு இருங்க’ இதுதான் பிக்பாஸ் விளையாட்டின் சீக்ரெட்” என்றார் சாண்டி.

மழலைத் தமிழில் ஷெரீன் எது சொன்னாலும் ரசிகக்குஞ்சுகள் மாதிரி எழுந்து எழுந்து கைத்தட்டியது ரியோ கோஷ்டி. வனிதாவிற்கு இது பொறுக்கவில்லை. அவர் காண்டானது அவரின் எக்ஸ்பிரஷனில் வெளிப்படையாகத் தெரிந்தது. “ஓ.. மக்கள் என்னைப் பார்த்து கைத்தட்டினது கூட இதுக்காகத்தான் போலிருக்கு. என்னை சைட் அடிச்சிருக்காங்க போல’ என்று சர்காஸ்டிக்காக சொன்னார். (உவ்வேக்!) இவரைப் போய் இன்னமும் தோழி என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ஷெரீன்.

விஜய்டிவி தொகுப்பாளர்கள் வெளியே செல்ல வேண்டிய நேரம். ‘பிரியங்கா… செலவே இல்லாம சோபாவை டிஸ்மாண்டில் பண்ணதுக்கு நன்றி” என்று சர்காஸ்டிக்காக கிண்டலடித்தார் பிக்பாஸ்.
இறுதிப் போட்டியாளர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன. தீபாவளிப் பட்டாசுகளை சிறுவர்கள் பிரித்துப் பார்க்கும் ஆர்வத்துடன் பார்சல்களை பிரித்துப் பார்த்தார்கள். முகின் மட்டும் இதில் உஷார். சம்பந்தப்பட்ட பிராண்டின் பெயரைச் சொல்லி நன்றி சொன்னார். மற்றவர்களையும் அப்படியே சொல்ல வற்புறுத்தினார். பிழைக்கக்கூடிய பிள்ளை.

அடுத்ததாக பிக்பாஸில் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்களைப் பற்றிய வீடியோ ஒளிபரப்பானது. அதில் தர்ஷனைப் பார்த்த போது கண்கலங்கினார் முகின். ரொமாண்டிக் போர்ஷன்களும் வந்தன.

மீண்டும் ஓவிய கேலரி. (யப்பா.. சாமிகளா.. கஷ்டப்பட்டு அந்த செட்டப்பை நல்லாத்தான் போட்டிருக்கீங்க.. இல்லைன்னு சொல்லலை. அதுக்காக மறுபடி மறுபடியுமா?!). தண்ணீர் பாட்டில்கள், சைட்டிஷ் எல்லாம் வழக்கம் போல் இருந்தன.

அந்நியர்களாக இங்கு நுழைந்த போட்டியாளர்கள் நண்பர்களாக மாறி அவர்களுக்குள் இருந்த ‘அந்நியனை’ அவ்வப்போது வெளிப்படுத்திய தருணங்களை புகைப்படங்களாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டுமாம்.

“தர்ஷனை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக சொன்னார்” முகின். படத்தில் வரும் பிரெண்ட்ஷிப்பை தாங்களே பார்க்கும் போது சினிமா பார்ப்பது போல இருக்கிறதாம். ஒரு கூட்டத்தையே சிரிக்க வைக்கும் சாண்டியையும் பாராட்டினார்.

வனிதாவோடு தான் இருந்த புகைப்படத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் ஷெரீன். வெளியே முரட்டுத்தனமாக பேசினாலும் வனிதாவின் உள்ளே ஒரு ‘அன்னை தெரசா’ இருக்கிறாராம். மகிழ்ச்சி. ஆனால் நம்பியார் முகபாவத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் வனிதா. சேரனும் தர்ஷனும் பல சமயங்களில் ஷெரீனை சமாதானப்படுத்தி அமைதியடைய வைத்தார்களாம்.

லியாவை தனது சகோதரியாக பார்ப்பதை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார் அபிராமி. இவர் சிறையில் இருந்த போது லியா வெளியிலேயே இரவில் படுத்துக் கொண்டாராம். இப்போது அழுதது வழக்கமான அழுகையில்லையாம். ஆனந்தக் கண்ணீராம். சாண்டி மற்றும் கவினுக்கு இடையிலான நட்பையும் அபிராமி வியந்தது சிறப்பு.

“நீ ஃபைனல் கண்டஸ்டன்ட்-னு நான் நெனக்கவேயில்லை.” என்று முகினை நோக்கி கலாய்த்த லியா, சேரன், தர்ஷன், கவின் ஆகியோரை மிஸ் செய்வதாக சொன்னார்.

கவினுடனான நட்பை கண்கலங்க பகிர்ந்து கொண்டார் சாண்டி. உதவும் மனப்பான்மை கவினுக்கு நிறைய இருக்கிறதாம். “தர்ஷன் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டேன். அவன் போயிட்டான்.. இப்ப முகின் ஆசைப்படணும்னு நெனக்கறேன்” என்று பெருந்தன்மையுடன் நெகிழ்ந்தார் சாண்டி.

இப்படிச் சொல்லி சந்தடி சாக்கில் அவரே வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Recommended For You

About the Author: Editor