கோட்டாவிற்கு எதிரான மனு தள்ளுபடி

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 17 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பொருட்கோடல் செய்யும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

17ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கே இருக்கின்ற நிலையில், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதானால் உயர் நீதிமன்றத்திற்கு செல்லமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் கோட்டபாய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்ற நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சிக்கல் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது


Recommended For You

About the Author: ஈழவன்