தவிசாளருக்கு எதிராக தனி நபர் போராட்டம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாகச் செயற்படுவதாகத் தெரிவித்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக தனி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மதவுவைத்தகுளம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் என்பவரே இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மதவுவைத்தகுளம் பகுதி மக்களுக்கு நான் பல வருடகாலமாக நீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் என் மீது பொய்யான காரணங்களை முன்வைத்து என்னை நீர்விநியோக பணியிலிருந்து நீக்கி வேறொரு நபருக்கு நீர்விநியோக பணியினை வழங்கியுள்ளதாகவும் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தவிசாளரின் இந்த தன்னிச்சையான முடிவுக்குத் தீர்வு வேண்டுமெனத் தெரிவித்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தெற்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான போராட்டம் எனக்கு நீதி வேண்டும்’ என்ற வசனத்தினை தாங்கிய பதாதையினை ஏந்தியவாறு அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவிக்கையில்,

கடந்த ஐந்து நாட்களாக பொது மக்களுக்கு நீரினை விநியோகம் செய்யாது நீர் விநியோக கட்டடத்தின் சாவியினை குறித்த நபர் வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள நீர்வழங்கல் திட்டம் எமது பிரதேச சபைக்குச் சொந்தமானது என்றும், எனவே தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் சாவியினை பெற்று பிறிதொரு நபரிடம் வழங்கி மக்களுக்கான நீர் விநியோகத்தினை மேற்கொண்டுள்ளதாக தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor