உலகப் போரில் குண்டு வீசிய விமானம் விபத்து!

இரண்டாம் உலக போரில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தரையிறங்கிய போது நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 விமானப் பணியாளர்கள் மற்றும் 4 பயணிகள் உட்பட 7 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் ஹார்ட்போர்டு விமான நிலையத்தில் இருந்து பி-17 ரக விமானம் 13 பேருடன் நேற்று புறப்பட்டுச் சென்றது.

விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் திடீரென தரையிறங்க முயன்றபோது இந்த விமானம் பிராட்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மையம் ஒன்றில் மோதியது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து பரபரப்புடன் காணப்படும் அந்த விமான நிலையம் 3½ மணிநேரம் வரை மூடப்பட்டது. பின்னர் ஒற்றை ஓடுதளம் விமான சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த விமானம் கடந்த 1987ம் ஆண்டு பிட்ஸ்பர்க் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றபோது விபத்தில் சிக்கியது. அதில் பலர் காயமடைந்தனர். அதன்பின் சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது குண்டுகளை வீசும் பணியில் இந்த விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

தற்போது இந்த விமானம் கோலிங்ஸ் அறக்கட்டளையால் இயக்கப்பட்டது. உலகப் போரில் ஈடுபட்ட விமானத்தில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற விரும்புபவர்கள் இதில் பணம் செலுத்தி பயணம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor