தமிழ் அகதிகளை விடுவிக்க அவுஸ்திரேலியா மறுப்பு

கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குடும்பத்தை விடுவிக்குமாறு ஐ.நா. விடுத்த கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம்-பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகள் கோபிகா, தருணிகா ஆகியோரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்துள்ள அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்தும் நோக்கில் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் இவர்களை நாடு கடத்த அவுஸ்திரேலியா முயன்றது. இவர்கள் ஏற்றப்பட்ட விமானம் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டது.

எனினும் இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை விசாரித்த அவுஸ்திரேலிய நீதிமன்றம் அகதிகளை நாடுகடத்த இடைக்காலத் தடை விதித்தது. இதனையடுத்து இவர்களை ஏற்றிச் சென்ற விமானம் பாதி வழியில் அவுஸ்திரேலியாவில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து அகதிகள் நடேசலிங்கம்-பிரியா மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் என 4 பேரும் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடேசலிங்கம் குடும்பத்தினருக்காக அவுஸ்திரேலியாவில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் பெண் சட்டத்தரணி கரினா போர்டு என்பவர் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதனை ஆராய்ந்த ஐ.நா. மனித உரிமைகள் குழு ’30 நாட்களுக்குள் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தைத் தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்’ என்று அவுஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

ஆனால் ஐ.நா.வின் இந்தக் கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது.

ஐ.நா.வின் கோரிக்கை எமக்குக் கிடைத்துள்ளது. ஆனால் கிறிஸ்துமஸ் தீவில் தங்கியிருக்கும் அகதிகள் குடும்பம் குறித்த வழக்கு நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் அவர்களை விடுவிக்க முடியாது என அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor