போராடிய இலங்கை அணி! தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியுடன் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.

இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

இதில் முதல் போட்டி மழையால், பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கராய்ச்சியில் நடைபெற்றது.

இதில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணிக்கு, குணதிலகா, பெர்னாண்டோ ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இதில் பெர்னாண்டோ நான்கு ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் திரிமானே களம் இறங்கினார்.

இவர் குணதிலகா உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் குணதிலகா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 134 பந்தில் 133 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பர் பனுகா 36 ஓட்டங்களும், ஷனகா 24 பந்தில் 43 ஓட்டங்களும் அடிக்க இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 297 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 50 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக பாகர் ஜமான், அபிட் அலி களமிறங்கினர்.

இரண்டு பேருமே இலங்கை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 123 ஓட்டங்கள் குவித்தது. அபிட் அலி அரைசதம் அடித்து 74 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன் பின் வந்த பாபர் அசாம் 31 ஓட்டங்களிலும், துவக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகர் அசாம் 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நுவன் பிரதீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ஹரிஷ் சோகைல் தனி ஒருவனாக கடைசி கட்டத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சை விளாசி தள்ளினார்.

இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் விகிதம் சீரான விகிதத்தில் எகிறியது. 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹரிஷ் சோகை அவுட்டாகிய நிலையில், பாகிஸ்தான் அணி இறுதியாக 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor