அழுகிய உணவை உண்ணும் அவல நிலையில் சிறுவர்கள்!

லத்தின் அமெரிக்க நாடான கொலம்பியாவில், மிகவும் நலிவுற்ற நிலையில் வாழும் பழங்குடியின குழந்தைகள் குப்பைகளிலிருந்து உணவு பொருட்களை எடுத்து உண்ணும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா நாட்டின் எல்லை பகுதியான Puerto Carreno என்ற இடத்தில், கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், திங்கள் கிழமை அந்த பகுதிக்கு சென்ற லாரி ஒன்று, குப்பை கழிவுகளை கொட்டிக்கொண்டிருந்தபோது, பழங்குடியின சிறுவன் அங்கு சென்று குப்பை கழிவுகளை பிரித்து அதில் இருந்த அழுகிய வாழை பழத்தை எடுத்து சாப்பிட்டான்.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த வீடியோ பதிவு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட நிலையில், பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றிருக்கும் Amorua பழங்குடியின மக்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், கொலம்பியாவில் வாழும் 30 சதவீத பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதாகவும், அவர்களில் 70 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதியுறுவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor