தீர்வுக்கு தடையாக மைத்திரி

புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலம் தீர்வினைக்காண முற்பட்டபோது ஜனாதிபதி மைத்திரியே தடையாக செயற்பட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விஜயகலா மகேஸ்வரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் மூலம் பல செயற்பாடுகளுக்கு தடை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய விஜயகலா மகேஸ்வரன் இதற்கு ஜனாதிபதியின் சில செயற்பாடுகளே காரணம் என தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இரு காட்சிகள் இணைந்து ஆட்சியினை முன்னெடுத்தமையே இதற்கு காரணம் என்றும் இந்த புரிதலில் இருந்து தற்போது எமது கட்சி சார்பாகவே வேட்பாளர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்றும் விஜயகலா மகேஸ்வரன் கூறினார்.

எனவே தமது அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் ஊடாகத் தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இன, மத பேதமின்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற வேண்டும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்