கிம் ஜோங் உன்னின் சகோதரர் அமெரிக்க உளவாளியா!!

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் அமெரிக்கா புலனாய்வுத்துறையில் உளவாளியாக செயற்பட்டதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை (Wall Street Journal) தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மலேசிய விமான நிலையத்தில் வைத்து நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நாம் (Kim Jong Nam), தொடர்பிலான பல தகவல்களை அறிந்தவர் என குறிப்பிடப்பட்ட ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

கிம் ஜோங் நாமுக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA க்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் குறிப்பிட்ட நபர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதும், இது தொடர்பில் CIA எந்தவித பதிலையும் வழங்கவில்லை.

வட கொரியாவிலிருந்து வௌியேறி பல வருடங்களாக வேறு நாடுகளில் தங்கியிருந்த கிம் ஜோங் நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புச் சேவைகளுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வௌியிட்டுள்ளது.

கிம் ஜோங் நாம், CIA உடன் தொடர்புள்ள ஒருவரை சந்திக்கும் நோக்கிலேயே 2017 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு சென்றிருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிம் ஜோங் நாமை கொலை செய்யுமாறு வட கொரிய அதிகாரிகள் உத்தரவிட்டதாக தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சுமத்திய போதிலும் வட கொரியா குற்றச்சாட்டை வன்மையாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் மலேசிய மற்றும் இந்தோனேஷிய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் விடுதலை செய்யப்பட்டனர்.


Recommended For You

About the Author: Editor