பொலிவியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ!!

பொலிவியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்திருப்பதாக ஏ.எப்.பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

குறிப்பாக சிறுத்தைகள், கரும்புலிகள், காட்டுப் பூனைகள் மற்றும் தேவாங்கு போன்ற விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் பெரும் வனாந்தரங்கள் மற்றும் புற்தரைகள் உள்ளடங்களாக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் அழிந்து போயுள்ளன.

வெப்பமான காலநிலையால் சிக்கியூடானியா வெப்பமண்டல சவன்னா பிரதேசம் மற்றும் சன்டா குரூஸில் உள்ள பழைய வனப்புமிக்க வனாந்தரம் என்பன இந்த பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன.

இந்தநிலையில் பொலிவியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் அந்த நாட்டு தீயணைப்பு படை வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் காட்டுத் தீ சம்பவங்கள் மிக மோசமானதாக இருப்பதாக பொலிவிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான இயற்கை வளம் அழிந்து போயுள்ளதாக அவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொச்சம்பா என்ற பிரதேசத்தில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முறையில் தீயணைப்பு வீரர்கள் இன்று ஈடுபட்டனர்.

தீயின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் விமானங்களின் மூலமாக கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor