நவம்பரில் நம்மை நோக்கி பாயும் தோட்டா!

தனுஷ் நடித்து நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் உறுதிபடுத்தப்பட்ட ரிலீஸ் தேதியைப் படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

தனுஷ், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ‘ஒன்றாக எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்’நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

படத்தின் அனைத்து விதமான பணிகளும் முடிவு பெற்று கடந்த பல மாதங்களுக்கு முன்னரே திரைப்படம் ரிலீசுக்குத் தயாராகிவிட்டது.

இந்த படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே, விசிறி, நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.

ஆனால் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும், பைனான்ஸியர்களுக்கும் இடையே எழுந்த கடன் பிரச்சினையின் காரணமாக பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும், படம் வெளிவராமல் இருந்தது. இது படக்குழுவினருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் கௌதம் மேனன், படம் சார்ந்த பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்றும், வரும் நவம்பர் 15 ஆம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் உறுதியாக ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி, ‘அசுரன்’, நவம்பர் 15ல் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’அதனைத் தொடர்ந்து ‘பட்டாஸ்’ என வரிசையாக தனுஷ் படங்கள் வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்த படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

தனுஷ்-செல்வராகவன் இணையும் இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக ஷான் ரோல்டான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய்க் கொண்டே இருந்ததால் வருத்தத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களை இந்த தகவல்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.


Recommended For You

About the Author: Editor