மோடி பேனருக்கு விதிவிலக்கா?

சட்டவிரோத பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசு, மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

இதனால் பேனர்கள் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் வருகைக்காக அரசு சார்பில் பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.

இதனால் விதிவிலக்கு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு தமிழகத்தின் கலைநகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதற்காக இருவரும் வரும் 11ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து கோவளத்தில் உள்ள ரிசார்ட்டுக்குச் செல்லவுள்ளனர்.

இந்தச் சூழலில் தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்பதற்காக பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய வெளியுறவுத் துறை, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அமர்வு முன்பு தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நேற்று (அக்டோபர் 1) முறையீடு செய்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை நாளை (அக்டோபர் 3) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்து, ஏற்கனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டனர்.

ஏற்கனவே பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கில் அரசுக்குக் கண்டனங்களையும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில் பிரதமருக்கான பேனர் வைக்க அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுரத்தில் ஆய்வு செய்யும் முதல்வர்

ஏற்கனவே பிரதமர், சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் குழு, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் எனப் பல தரப்பு அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் பலமுறை ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று (அக்டோபர் 2) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்.

முதலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர், பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Recommended For You

About the Author: Editor